20 Nov 2011

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.


சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்க உதவும்வெந்தயம்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதன் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுப்படி, வெந்தயம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. வெந்தயம் எந்த அளவு, எந்த நிலையில் மற்றும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதன் விவரம் கீழே உள்ளது.

* வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும்.

* வெந்தயம் அதிக நார்சத்து (50 சதவீதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கெலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது, வெந்தயத்தில் உள்ளது.

* உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைப் பொறுத்தது. 25 முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது.

* ஆரம்ப காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம்.

* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக இடித்தோ, தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உணவுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும்.

* இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது, அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது, விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவுக்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும் போது, உண்பவரின் ருசிக்கேற்ப, உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

* ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

* வெந்தயம் எடுத்து கொள்வதுடன், தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்கச் செய்யும். எனவே, அதிக கலோரி கொடுக்கக்கூடிய, குறிப்பாக "சாச்சுரேட்டேட்' கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு, ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரை நோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். ஆயினும், உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயால் திடீரென ஏற்படும் உடல்நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

No comments:

Post a Comment

Twitter Bird Gadget