20 Mar 2012

மன அழுத்தம் நீக்கும் மருதாணி!

மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர்

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள். டாக்டர் எமர்சன் மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர்.

டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார். 

கை, கால் அரிப்பு 

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

நகச்சுத்தி 

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.

நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.

நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

மேக நோய்கள் நீங்க

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.

சுளுக்கு நீங்க

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

நல்ல தூக்கம் பெற

மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.

மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.
 
Thanks - Tamilcnn.com

No comments:

Post a Comment

Twitter Bird Gadget