திங்கள்கிழமை இரவு சனி கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்திய கோளியல் சங்கத்தின் செயலர் ரகுநந்தன் குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: "எந்த ஒரு கிரகமும் சூரியனுக்கு நேர் எதிராக இருக்கும்போது அந்த கிரகம் சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு ஒளிரும். திங்கள்கிழமை சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயம் வரை சனி கிரகத்தை அதன் வளையங்களுடன் வெறும் கண்களால் காணலாம்.
வானத்தின் கிழக்கில் ராசி மண்டலத்தின் 6-வது பகுதியான கன்னி ராசிப் பகுதியில் சனி கிரகம் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதை தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் வளையங்கள் மிகத் தெளிவாகத் தெரியும்.
378.1 நாள்களுக்கு ஒரு முறை, சனி கிரகம் இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது 30 ஆண்டுகளில் 29 தடவை இவ்வாறு நேர்கோட்டில் வரும். அப்போதெல்லாம் நாம் சனியை வெறும் கண்களால் கண்டுகளிக்கலாம். இதற்கு முன் சென்ற ஆண்டு (2010) மார்ச் 22-ம் தேதி இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வந்தது இனி அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் 15-ம் தேதி இவ்வாறு வரும்' என்றார் அவர்.
No comments:
Post a Comment