ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அதை தொடர்ந்து உருவான சுனாமியால் முக்கிய அணுமின் நிலையம் ஒன்றில், நேற்று பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதனால், கதிர்வீச்சு அபாயம் உருவாகியுள்ளது. அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், "அணு சக்தி உஷார்" நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராட்சத சுனாமி அலைகள் நாட்டின் வடகிழக்கு பகுதியைத் தாக்கின. இப்பகுதியில் தான், புக்குஷிமா மற்றும் ஒனகாவா என்ற இரு அணுமின் நிலையங்கள் உள்ளன. தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கி.மீ., வடகிழக்கில் உள்ள புக்குஷிமா நிலையத்தில், இரண்டு அணுமின் தயாரிப்பு பிரிவுகள் உள்ளன. இந்த இரண்டிலும் ஆறு அணுமின் உலைகள் இயங்கி வருகின்றன. சுனாமி தாக்கிய போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, புக்குஷிமா அணுமின் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் வரை வந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டால், அணுமின் உலைகள் தாமாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அணு உலைகள் தாமாகவே செயல்பாடுகளை நிறுத்தி விட்டன. இதைத் தொடர்ந்து கதிர்வீச்சு ஏதேனும் நிகழ்ந்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்ததால், புக்குஷிமா உள்ளிட்ட வடபகுதிகளில் இயங்கும் ஐந்து அணுமின் நிலையங்களில், "அணுமின் அவசர நிலை" பிறப்பிக்கப்பட்டது.
அதேநேரம், புக்குஷிமா மற்றும் ஒனகாவா அணுமின் நிலையங்களில் குளிரூட்டும் முறைகளில் (கூலிங் சிஸ்டம்) சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒனகாவா நிலையத்தில் அதுபோன்ற சிக்கல் எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருந்தாலும், புக்குஷிமாவில், அணு உலை குளிரூட்டும் முறையின் செயல்பாட்டில் சிக்கல் தொடர்ந்தது.
நிலநடுக்கத்திற்கு பின், அணுசக்தி தயாரிக்க உதவும், யுரேனியம் செறிவூட்டும் கொள்கலனில் நிரப்பப்பட்டிருக்கும் வெப்ப தணிப்பு திரவம் (கூலன்ட்) கசிந்து வெளியேறியதும், அதன் அளவு குறைந்திருந்ததும் கண்டறியப்பட்டன.
இதனால் தான், குளிரூட்டும் முறையின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், பிரதமர் நவோட்டோ கான் வெளியிட்ட அறிக்கையில், "கதிர்வீச்சு அபாயம் இல்லை" என தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று நண்பகல் 12 மணியளவில், புக்குஷிமா நிலையத்தில், ஒன்றாம் எண் அணு உலையில் உள்ள நான்கு கட்டடங்களில் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இக்காட்சி நேற்று அந்நாட்டு "டிவி"களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. அக்கட்டடப் பகுதிகள் வெகுதூரத்துக்கு வெடித்து சிதறுவதும், கட்டடத்தில் இருந்து பயங்கரப் புகை வெளியேறுவதும் காட்டப்பட்டன.
முதல் அணுமின் உலையை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம், இவ்விபத்தில் தங்களது ஊழியர்கள் பலர் காயம் அடைந்ததாக தெரிவித்துள்ளது. ஒன்றாம் எண் உலையின் கதி என்னவானது என்பது பற்றிய முழு விவரமும் வெளியாகவில்லை. அதேநேரம், கட்டடத்தின் வெளிப் பகுதியில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் சீசியம் மற்றும் ஐயோடின் ஆகிய தனிமங்கள் சிதறிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிமங்கள் சிதறிக் கிடந்ததையும், வெப்பத்தணிப்பு திரவம் கொள்கலனை விட்டு வெளியேறியதையும் வைத்து பார்க்கும் போது, கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, புக்குஷிமா அணுமின் நிலையத்தைச் சுற்றி 20 கி.மீ., சுற்றளவில் வசித்து வந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிரதமர் நவோட்டோ கான், புக்குஷிமா பகுதியை ஹெலிகாப்டரில் சென்று நேற்று பார்வையிட்டார்.
இதையடுத்து அணுமின் நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "புக்குஷிமாவின் ஒன்றாம் எண் தொழிற்சாலை தன் திறனை இழந்து விட்டது. நிலநடுக்கத்தை அடுத்து வெப்பத் தணிப்பு திரவம் கசிந்தது தான் இந்தத் திறன் இழப்புக்கு முக்கிய காரணம்" என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி-இந்நேரம்
No comments:
Post a Comment