தோஹா:பஹ்ரைனில் நடக்கும் போராட்டம் மக்கள் புரட்சியல்ல. மாறாக ஒரு பிரிவினர் நடத்தும் பிரிவினைக்கான போராட்டம் என சர்வதேச முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் சபையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்தாவி தெரிவித்துள்ளார்.
கத்தர் தலைநகர் தோஹாவில் நேற்று முன்தினம் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது கர்ழாவி கூறியதாவது: எகிப்து, துனீசியா, லிபியா,யெமன் ஆகிய நாடுகளிலிருந்து வித்தியாசமான சூழல் பஹ்ரைனில் நிலவுகிறது.
மேற்கண்ட நாடுகளிலெல்லாம் மக்கள் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிராக விழித்தெழுந்துள்ளார்கள். ஆனால், பஹ்ரைனிலோ, ஒரு பிரிவினர் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அந்நாட்டின் மீது தங்களது சொந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர்.
சொந்த நாட்டுமக்களுக்கெதிரான ஷியாக்களின் கிளர்ச்சியாகும் இது. ஆதலால், இந்த போராட்டம் இதர நாடுகளில் நடப்பது போன்றதல்ல. எதிர்ப்பாளர்களின் பிரிவினைக் கோரிக்கைகளால் 450000 சன்னிகள் அல் ஃபத்தாஹ் மஸ்ஜிதில் ஒன்றுகூடி தங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ப்யர்ல் ரவுண்டபுவுட்டில் திரண்டிருந்தவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தியதாக கூறுவதை ஏற்றுக்கொள்ளவியலாது. ஆயுதங்களை பயன்படுத்தி, மஸ்ஜிதுகளையும், சன்னி முஸ்லிம்களையும் தாக்கிவிட்டு அமைதியாக போராட்டம் நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
எதிர்ப்பாளர்கள் சொந்த நாட்டையும், நாட்டு மக்களையும் மறந்துவிட்டு அந்நிய நாட்டின் தலைவர்களை உயர்த்திக் காட்டியுள்ளனர். அலி காமினி மற்றும் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் புகைப்படங்களை அவர்கள் உயர்த்திப் பிடித்த பொழுதுதான் பிரச்சனை உருவானது. இவர்களிருவரும் பஹ்ரைனின் பிரதிநிதிகளல்லர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்கள் ஜி.சி.சியின் தனித்தன்மையை ஏன் கைவிட்டனர் என்பதுக் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. இத்தகையதொரு சூழலில்தான் பஹ்ரைன் இளவரசர் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள அறிவுடைய சன்னிகளும், ஷியாக்களும் தயாராகினர். ஆனால், இதன் பின்னர் பரஸ்பர பகைமைக்கும், பிரிவினைக்கும் விவகாரம் சென்றுவிட்டது. ஷியா பிரிவினர் முழுவதும் சன்னிகளுக்கெதிராக களமிறங்கியுள்ளதைத்தான் பஹ்ரைனில் காண்கிறோம்.
இத்தகையதொரு போராட்டத்தை இஸ்லாமிய ரீதியில் காணவியலாது. இது ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கெதிராக நடத்தும் கிளர்ச்சியாகவே காண இயலும். எல்லாவித பிரிவினைக்கும் நான் எதிரானவன். ஆதலால் பிரிவினையை ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கெதிராக எனது குரல் உயர்ந்துள்ளது.
பஹ்ரைனின் ஆட்சியாளர்கள் எதிர்ப்பாளர்களுடன் தொடர்புக்கொள்ள முயன்றனர். அவர்களின் கோரிக்கைகளைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறி எல்லாவிதமான பிரிவினைக் கோரிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
சொந்த நாட்டை நிர்மாணித்து மக்களை ஐக்கியப்படுத்துபவர்கள்தாம் உண்மையான சீர்திருத்தவாதிகளாவர். இவ்வாறு கர்தாவி கூறினார்.
நன்றி-தூது ஆன்லைன்
No comments:
Post a Comment