31 Mar 2011

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதியாட்டத்துக்குள் இந்தியா நுழைந்துள்ளது.





29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. டாஸ் வென்று முதலில் மட்டை வீசத் தீர்மானித்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பானதொரு துவக்கத்தைத் தந்திருந்தனர். ஷேவாக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார் என்றாலும் 38 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் நிதானமாக நின்று விளையாடி 85 ரன்கள் எடுத்தார்.

நடுவில் சில இந்திய விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்திருந்தன என்றாலும் ஆறாம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா சரிவைக் கட்டுப்படுத்தி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்றிருந்ததோடு 36 ரன்களையும் குவித்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் மிக அற்புதமாகப் பந்து வீசினார். இந்தியாவின் முக்கிய மட்டைவீச்சாளர்கள் ஐந்து பேரின் விக்கெட்டுகளை இவர் எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் தடவையாக ஒரு ஆட்டத்தில் இவர் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை எடுத்திருந்தார்.
இரண்டாவதாக மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர் ஹாஃபிஸ் 43 ரன்களை எடுத்துள்ளார். மிஸ்பா உல் ஹக் நிதானமாக விளையாடி அரை சதம் எடுத்தாலும் மற்ற வீரர்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் தரும் விதமாகவே இருந்தது.

இந்தியாவுக்காக பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட்களை எடுத்திருந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக 85 ரன்களை எடுத்த சச்சின் டெண்டுல்கருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு அரையிறுதியில் நியுஸிலாந்தை வென்று ஏற்கனவே இறுதியாட்டத்துக்குள் நுழைந்துள்ள இலங்கையை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை நகரில் இந்த ஆட்டம் நடைபெறும்.

No comments:

Post a Comment

Twitter Bird Gadget